தனிச்சிறப்பு..!!

 



தனிச்சிறப்பு..!!

ஒரு அடர்ந்த காட்டில் நிறைய பழம், செடி, கொடி வகைகள் இருந்தன. அக்காட்டில் வளரும் அனைத்து பழங்களும் வருடத்திற்கு ஒருமுறை தனது நண்பர்களை சந்திப்பதற்காக மாநாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தன.


அந்த வகையில் அனைத்து பழங்களும் சேர்ந்து அந்த ஆண்டின் கடைசியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தன. தன் நண்பர்களை சந்திப்பதற்கு ஆர்வமாக அனைத்து பழங்களும் தயாராகிச் சென்றன. 


பின் அக்கூட்டத்தில் தலைமையேற்று பேசிய வாழைப்பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது மற்றும் எது சிறப்புடையது? என்ற கேள்வியைக் கேட்டவாறே தன் உரையை முடித்துக் கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறியது.


பின்னர் ஆப்பிள், தன்னை உட்கொள்பவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்புத்திறன் என்னிடம் உள்ளது என்று கூறியது. உடனே, மாதுளம்பழம் தன்னை உட்கொள்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் திறனும், குடற்புண் வருவதை தடுக்கும் சக்தியும் உள்ளது என தன்னைத்தானே பெருமைப்படுத்தி பேசியது.


பின்னர், கொய்யாப்பழம் தன்னை சாப்பிடுபவர்களுக்கு முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவேன் எனவும், மேலும் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும் என்றது. பிறகு, அன்னாசிப்பழம் தன்னை உட்கொண்டால் ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடிய திறன் என்னிடமே உள்ளது என்றது. இவ்வாறு அனைத்து பழங்களும் தன்னைத்தானே உயர்த்தி பேசியது. 


ஆனால், திராட்சைப்பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது. அனைத்துப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தது. திராட்சைப்பழம் ஏதாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், திராட்சைப்பழமோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது. 


திராட்சை அமைதியாக இருந்ததைப் பார்த்த மற்ற பழங்கள் அதைப் பார்த்து இழிவாக நினைத்து சிரித்தது. அச்சமயம் பலாப்பழம் ஒன்று உருண்டு வந்து திராட்சையின் அருகில் நின்றது.


பலாப்பழம், திராட்சைப் பழத்தை பார்த்து அன்புடன் திராட்சையே! நீ ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்று கேட்டது. ஆனால், திராட்சை எதுவும் பேசாமலே இருந்தது.


திராட்சையே உன்னைப் பற்றி எனக்கு தெரியும். உலகில் உள்ள அனைத்து பழங்களிலும் சிறப்புப்பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை நிரம்பியவன் நீதான் என்று! ஆனால், அதைத்தவிர ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே கூற வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களுக்கும் உன் தகுதி பற்றி தெரியும் என்று கூறியது.


பின்னர், திராட்சைப்பழம் அமைதியாக மற்ற பழங்களைப் பார்த்து, நீங்கள் எல்லோருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல. நாங்களோ, ஒரு கூட்டமாகவும், ஒற்றுமையாகவும், கொத்தாகவும் வளர்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு இடம் தருகிறோம். விட்டுக்கொடுக்கும் எண்ணத்துடன் வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும்போதும் நாங்கள் ஒன்றாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.


எங்களைச் அரைத்து சாறாக்கி குடிக்கும்போது ஒன்றாகவே அழிந்து போகிறோம். வாழும்போதும், வளரும்போதும், ஏன் மரணத்திலும் கூட நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம் என்று கூறியது. அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை அடைந்திருக்கிறோம். வேறு எதுவுமில்லை என்றது.


அப்பொழுது தான் மற்ற பழங்கள் திராட்சையை பற்றி நன்கு தெரிந்துக்கொண்டது. தாங்கள் சிரித்ததற்கு திராட்சையிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.


நீதி :


ஒற்றுமையாக இருப்பதே தனிச்சிறப்பு. மற்றவர்களை காட்டிலும் நாம் தனிச்சிறப்புடன் இருக்க வேண்டுமானால் திராட்சையை போல் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும்.

தனிச்சிறப்பு..!! தனிச்சிறப்பு..!! Reviewed by ambrish on October 28, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app