திறமையால் உயிர் தப்பிய குரங்கு!!




திறமையால் உயிர் தப்பிய குரங்கு!!

ஒரு ஆற்றின் கரையோரத்தில் பெரிய நாவற்பழ மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் ஆற்றில் வசிந்து வந்த பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்திற்கு அருகில் வந்தது. குரங்கு முதலையை பார்த்து, முதலையே! அதிக சுவையுடைய நாவற்பழங்களை நீயும் ருசித்துப்பார் எனக்கூறி முதலைக்கு நாவற்பழங்களை கொடுத்தது.


அன்றுமுதல் முதலையும், குரங்கும் நண்பர்களாகினர். தினமும் முதலை குரங்கைப் பார்க்க ஆற்றின் கரைக்கு வந்துவிடும். இருவரும் மகிழ்ச்சியாக கதைகளை பேசியும், வாழ்க்கை பற்றிய கருத்துகளை பகிர்ந்தும் வந்தன. மேலும், தான் சாப்பிட்டது போக மீதமிருந்த நாவற்பழங்களை முதலை தன் மனைவிக்கும் எடுத்துச் செல்லும்.


ஒருநாள் முதலையின் மனைவி, அமிர்தம் போல் சுவையுடைய இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது? என்றது. ஆண் முதலை, எனக்கு நெருங்கிய நண்பனான குரங்கு ஒன்று அன்பாக இந்தப் பழங்களை தருவதாக கூறியது. பின் முதலையின் மனைவி அமிர்தம்போல் இருக்கும் இப்பழங்களை எப்போதும் சாப்பிடும் அந்த குரங்கின் இதயமும் இதைப் போலவே சுவையாகத்தானே இருக்கும் அல்லவா? அதனால் அக்குரங்கை கொன்று அதனுடைய இதயத்தை கொண்டு வருமாறு கூறியது.


உடனே ஆண் முதலை மனைவியிடம், குரங்கு நம்மிடம் நண்பனை போல் பழகுகிறது. மேலும் நம் பசிக்கு பழங்களை கொடுத்து உதவிகளை செய்கிறது. இவ்வளவு உதவிகள் செய்யும் குரங்கிற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அதனால் இந்த எண்ணத்தை இதோடு விட்டு விடு என்று கோபமாக கூறியது.


அதற்கு முதலையின் மனைவியோ, அந்த குரங்கை எனக்காக கொன்று அதன் இதயத்தை கொடுக்க வேண்டும் என கண்டித்துக் கூறியது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆண் முதலை கண்ணீர் விட்டு வருந்தியது. எனக்கு பழங்கள் கொடுத்த குரங்கை நான் எப்படிக் கொல்வது? என வருத்தத்தில் குரங்கைப் பார்க்கச் சென்றது. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் பார்த்த குரங்கு, நண்பனே! ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டது.


அதற்கு அந்த முதலை, உன்னிடம் பழங்களை வாங்கிச் சாப்பிடும் நான் இத்தனை நாட்களாகியும் உன்னை வீட்டிற்கு அழைத்து வராததால் என் மனைவி என்னை திட்டிவிட்டாள் என்று கூறியது. அதனால் நீ உறுதியாக என் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தியது. குரங்கும், சரி என ஒத்துக்கொண்டது. குரங்கும் ஆனந்தமாய் முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது.


முதலை நடு ஆற்றை தாண்டி சென்றதற்கு பின் குரங்கிடம் உண்மையைக் கூறத் தொடங்கியது. நண்பனே! என்னை மன்னித்து விடு. என் மனைவிக்காக உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குரங்கு, நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொன்றுவிடுவதாக கூறுகிறீர்கள் என பயத்துடன் கேட்டது. நீ கொடுத்த நாவற்பழங்கள் அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே, உன் இதயத்தை ருசித்துப் பார்க்க ஆசையாக உள்ளது என தன் மனைவி கூறியதை குரங்கிடம் முதலை கூறியது.


உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, அதை நீ கரையிலேயே கூறியிருந்தால், நாவல்மரத்தின் அடியில் மறைத்து வைத்திருக்கும் ருசி மிகுந்த நாவற்பழங்களை அண்ணிக்காக எடுத்து வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்! என்றது குரங்கு. அதைக் கேட்டதும் முதலை, நண்பனே! அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு. உன்னை நாவல் மரத்தடிக்கு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இரண்டும் கரைக்கு வந்தது.


முதலை, நாவற்பழங்களை தருமாறு கூறியது. ஆனால் குரங்கோ முதலையிடம் கோபமாக, உன்னை நல்ல நண்பனாக நினைத்தேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். உன் குணம் என்னவென்று எனக்கு இப்போது புரிந்தது. இனி இந்த நாவல்மரத்தடிக்கு வராதே! என்றது. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றது.


நீதி :


ஆபத்தில் நேரத்தில் புத்தசாலிதனமாக நடந்து கொள்வதே சிறப்பு.


திறமையால் உயிர் தப்பிய குரங்கு!! திறமையால் உயிர் தப்பிய குரங்கு!! Reviewed by ambrish on October 28, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app