சுயநலத்துடன் பழகிய நண்பன் !!
ஒரு ஊரில் மோகன், சூர்யா என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். மோகன் எந்தவொரு எதிர்பார்ப்பும், சுயநலமின்மையும் இல்லாதவர். ஆனால், சூர்யா கொஞ்சம் சுயநலம் உள்ளவர். மோகன் இதை அறியாமல் சூர்யாவை முழுவதுமாக நம்பினார். சூர்யா அடிக்கடி மோகனிடம் ஐம்பது, நூறு என்று கடன் வாங்குவார். ஆனால், திருப்பித் தராமல் காலம் கடத்துவார்.
மோகனின் மனைவி, ஏன் உங்கள் நண்பர் கேட்கும் போதெல்லாம் கடன் கொடுக்கிறீர்கள். அவரோ திருப்பித் தருவதில்லை. நாம் என்ன வசதியாகவா இருக்கிறோம்? நாமும் கஷ்டத்தில் தானே இருக்கிறோம். நான் இப்படிச் சொல்வதால் உங்கள் நண்பரை குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் என்பாள். மோகன் அதை கண்டுகொள்ள மாட்டார். மோகன் மனைவியும் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டாள்.
வழக்கம்போல் ஒருமுறை சூர்யா, மோகனிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். மோகனிடம் அவ்வளவு பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்று கூற முடியாமல் இருந்தார். மோகன் தன் மனைவியிடம் கூறியபோது அவள், நம்மிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று உங்கள் நண்பரிடம் கூறிவிடலாம் என்றாள்.
உடனே மோகன், அப்படி எல்லாம் கூற முடியாது என்றான். பின் தன் நண்பனுக்காக வீட்டிலிருந்த உடைந்துபோன தங்க மோதிரம் ஒன்றை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை வாங்கி நண்பன் சூர்யாவிடம் கொடுத்தார். மோதிரத்தை அடகு வைக்க இருவருமே சென்றனர். இதனால் மோகனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது.
பல மாதங்களாகியும் சூர்யா மோகனிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. மோகனும் அவனிடம் கேட்கவில்லை.
மோகனின் மனைவி, பணத்தை திருப்பி கேட்காவிட்டால் தன் தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக பயமுறுத்தியதால், மிகவும் பணிவாகவே தன் நண்பனிடம் பணம் பற்றிக் கேட்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் சூர்யாவிற்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், கோபத்தை வெளிக்காட்டாமல் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறினார். அப்போது சூர்யாவிடம் பணம் இருந்தது. ஆனால், பணத்தை திருப்பித் தர மனம் வரவில்லை.
ஒருநாள் இருவரும் இரவு படம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. திடீரென ஒரு திருடன் அவர்கள் எதிரே வந்து கத்தியைக் காட்டி கையில் உள்ள பணத்தை தரும்படி கூறினான்.
மோகனிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் சூர்யாவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே சூர்யா தனது பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து உனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொள் என்றார். உனக்குக் கொடுக்கவேண்டிய கடனை இப்போதே அடைத்துவிட்டேன் என்று கூறி அப்பணத்தை மோகனின் கைகளில் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டார். திருடனும் மோகனின் கையிலிருந்து பணத்தைப் பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.
நல்ல வேலையாக நான் பிழைத்தேன். எப்படியும் திருடன் நம்மிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றிருப்பான். நமக்கு நஷ்டமாகியிருக்கும். நல்லவேளை பணத்தை மோகனிடம் கொடுத்ததால் நமது கடனும் தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தான். மோகனின் பணம்தானே திருடுப்போனது. நமக்கொன்றும் நஷ்டமில்லையே. தான் நன்றாக சிந்தித்து செயல்பட்டோம் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார், சூர்யா.
அப்போது தான் மோகன், சூர்யாவின் மோசமான எண்ணத்தை புரிந்து கொண்டார். அச்சமயம் தன் மனைவி கூறிய சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. நீயெல்லாம் ஒரு நண்பனா? உன்னைப் பற்றி இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன். உன்னைப் போல் ஒரு சுயநலமான நண்பன் இனி எனக்குத் தேவை இல்லை. ஆயிரம் ரூபாயை இழந்ததன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது. இனி உன் பொய்யான நட்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வேகமாக வீடு வந்து சேர்ந்தார், மோகன்.
நீதி :
யார் நல்லவர் என்பதை நமது கடினமான சூழ்நிலையில் தான் புரிந்துக்கொள்ள முடியும்.
சுயநலத்துடன் பழகிய நண்பன் !!
Reviewed by ambrish
on
October 28, 2022
Rating:
Reviewed by ambrish
on
October 28, 2022
Rating:
