சிவபெருமானின் தலையில் சந்திரன் இருப்பதன் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா?


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                சிவபெருமானின் தலையில் சந்திரன் இருப்பதன் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா?

                சிவபெருமான் தன் தலைமுடியில் சந்திரனை வைத்திருப்பது ஏன்?


இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் சிவபெருமான். பொதுவாக சிவபெருமான் மிகவும் கோபப்படக்கூடிய கடவுள் என்று அனைவராலும் கூறப்படுபவர். 


ஆனால் உண்மையில் அவர் கெட்டவர்களுக்கு மட்டும் தான் ருத்ர மூர்த்தி... தன் பக்தர்களுக்கு எப்போதுமே அவர் சாந்த மூர்த்தி தான். தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு சிவபெருமான் அவர்கள் வேண்டும் வரங்களை வழங்கக்கூடியவராவார்.


பொதுவாக மற்ற கடவுள்களைவிட சிவபெருமான் மிகவும் வித்தியாசமானவர். அதை நீங்கள் அவரின் உருவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


மற்ற கடவுள்கள் ஆபரணங்களில் ஜொலிக்க... சிவபெருமானோ வெறும் தோல் ஆடையை உடுத்திக்கொண்டு கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கிறார்.


அவர் அணிந்துள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமும், கதையும் உள்ளது. அதன்படி அவர் தலையில் பிறை வடிவில் சந்திரன் இருப்பதற்கும் காரணம் உள்ளது. 


சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று ஒரு பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறை தான். சந்திரன் என்றால் நிலா என்றும், சேகர் என்றால் உச்சம் என்றும் பொருள். உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்த்தம் தான் சந்திரசேகர்.


ஆனால் சிவபெருமான் ஏன் தலையில் நிலவை வைத்திருக்க வேண்டும். அதற்கான காரணத்தையும், அதன்பின் இருக்கும் கதையையும் இந்த பதிவில் பார்க்கலாம்.


சிவபெருமான் தலையில் நிலவை வைத்திருப்பதற்கான காரணம் :


பாற்கடலை கடைந்த போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய பிறகு அவர் உடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது. நிலவானது குளிர்ச்சியை வழங்கக்கூடும். ஆதலால் சிவபெருமான் தன் உடலின் வெப்பநிலையை குறைத்து கொள்வதற்காக நிலவை தன் தலையில் வைத்து கொண்டதாக புராண குறிப்புகள் கூறுகின்றன.


மற்றொரு காரணம் :


பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். 27 மனைவிகள் இருந்தாலும் ரோகிணி மீது மட்டும் அதீத ஈர்ப்பு கொண்டிருந்தார் சந்திரன். இதனால் மற்ற மனைவிகள் ரோகிணி மீது அதிக பொறாமை கொண்டனர்.


மேலும் மற்ற மனைவிகள் அனைவரும் அவர்களின் தந்தையிடம் சென்று சந்திரன் தங்களை சரியாக கவனிப்பதில்லை என்று புகார் செய்தனர். இது தான் சந்திரன் மற்றும் ரோகிணிக்கு சோதனையாக அமைந்தது.


பிரஜாபதி தன் மகள்கள் அனைவரையும் சரிசமமாக நடத்தும் படி சந்திரனிடம் கூறினார். ஆனால் சந்திரன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற பிரஜாபதி தினமும் உனது பிரகாசத்தை இழப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவாக சந்திரன் தினந்தினம் தனது பிரகாசத்தை இழக்க தொடங்கினார்.


பிரஜாபதியின் சாபத்தால் தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்து கொண்டு சந்திரன் சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார். சிவபெருமான் பாதி ஒளி பொருந்திய நிலவை தலையில் அணிந்து கொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரிப்பதில் வெற்றி கண்டார். அடுத்த 15 நாட்களில் சந்திரன் மீண்டும் தேய தொடங்கினார். இதனால் தான் சிவபெருமான் தன் தலையில் சந்திரனை வைத்திருக்கிறார்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

சிவபெருமானின் தலையில் சந்திரன் இருப்பதன் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா? சிவபெருமானின் தலையில் சந்திரன் இருப்பதன் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா? Reviewed by ambrish on October 30, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app