யார் முட்டாள்??
சோழபுரம் எனும் ஊரில் ராமு என்பவர் வாழ்ந்து வந்தார். அவரை அவ்வூர் மக்கள் அனைவரும் முட்டாள் என்றே கூறுவார்கள். அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் ராமு ஒரு விளையாட்டு பொருளாகவே இருந்தான்.
அவனிடம் உடைகளை கொடுத்து அணிந்து வரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியை மேல் உடம்பிலும், மேற்சட்டையை காலிலும் அணிந்து வருவான்.
யார் அவனை அந்த நிலையில் பார்த்தாலும் சிரித்து விடுவார்கள். அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் ராமுவை வரவழைத்து, இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா? என்று கேட்பார்கள்.
ஒருநாள் குமார் என்பவர் வீட்டிற்கு வெளியூரிலிருந்து அவரது நண்பர் சக்தி பண்டிகைக்கு வந்திருந்தார். பின்னர் குமார் இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வரவழைத்தால், நமக்கு நேரம் கடப்பதே தெரியாது என்றார். உடனே அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் ராமு அங்கு வந்து சேர்ந்தான். குமார் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, நன்றாகப் பார். ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. மற்றொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள் என்றான். ராமு இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான். 'ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!" என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டான்.
பின்னர் குமார் அவரது நண்பர் சக்தியிடம் இவனைப் போன்ற முட்டாளை நீ பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? விலை குறைவான மதிப்புடைய நாணயத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சந்தோஷமடைகிறான் என்றார்.
குமாரின் நண்பர் சக்திக்கும், ராமுவுடன் விளையாட வேண்டும் என்று ஆசை வந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, வலது கையில் வைர மோதிரம் உள்ளது. இடது கையில் வெறும் ஐம்பது பைசா உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள் என்றார், சக்தி.
ராமு இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்து சற்று நேரம் சிந்தித்தான். அவன் இறுதியாக ஐம்பது பைசாவைத்தான் எடுத்தான். குமார் தன் நண்பரிடம் நீங்கள் ராமுவிடம் பேசிக் கொண்டிருங்கள். எனக்கு வேலை இருக்கிறது என்று உள்ளே சென்றுவிட்டார்.
பிறகு சக்தி, ராமுவிடம் நீ ஏன் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறாய்? அதிக விலை மதிப்புடைய வைர மோதிரத்தை விட்டுவிட்டு வெறும் ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டாயே! இனியாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள் என்று அறிவுரைக் கூறினார்.
ராமுவோ ஐயா! நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லோரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுகின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து ரூபாய் கிடைக்கிறது.
நீங்கள் சொல்வது போல ஒரே ஒரு நாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன் பிறகு யாரும் என்னிடம் கையை நீட்டி விளையாட மாட்டார்கள் என்றான், ராமு. இதைக்கேட்ட சக்தி வியந்து போனார்.
நீதி :
ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பார்த்து அவர்களை எளிதில் நிர்ணயிக்கக்கூடாது. யாரையும் முட்டாள் என்று என்ணுவது தவறு.
யார் முட்டாள்??
Reviewed by ambrish
on
October 28, 2022
Rating:
Reviewed by ambrish
on
October 28, 2022
Rating:
