64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா..!!


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா..!!

♕ இதுவரை சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் நாம் பலரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்த்தோம்... அந்த வகையில் இப்போது நாம் காண இருப்பது விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த ஒரு வீரர்...!!


♕ விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால் நமக்கு தெரிந்த, தெரியாத மற்றும் உள்விளையாட்டுகள், வெளிவிளையாட்டுகள் என பலதரப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் 80-களுக்கு முன் தமிழகத்தில் பலரும் அறியாத விளையாட்டான சதுரங்க விளையாட்டு.


♕ கண்டுபிடிப்புகள், சமூக சேவை, விவசாயம், கலை வளர்ச்சி, விளையாட்டு என்று ஏறக்குறைய எல்லா பாகங்களிலுமே தமிழன் தன்னுடைய காலடிச் சுவட்டினை அழுத்தமாக பதித்துவிட்டான்.


♕ அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த சதுரங்க விளையாட்டில், ரஷ்யர் அல்லாத ஒருவர் சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி வீரராக பட்டொளி வீசிக்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர்...!!


♕ பதினான்கு வயதில், 'இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்"...!!


♕ 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் (International Master) என்ற பட்டம்...!!


♕ 16 வயதில் மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டம்...!!


♕ பதினெட்டு வயதில் 'உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்"...!! 


♕ 'உலகின் அதிவேக சதுரங்க வீரர்" என்ற சிறப்பு பட்டம்...!! 


♕ ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற... சாதனை நாயகன்...!!


♕ சதுரங்கத் தமிழன்...!!


♕ 64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா...!!


♕ 'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்" எனப் புகழப்படுபவர்...!!


♕ இந்தியாவின் 'செஸ் நாயகனாக" திகழ்பவர்...!!


♕ சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தவர்.


அவர்தான் உலகளவில் சதுரங்க விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும்


👇👇


விஸ்வநாதன் ஆனந்த்

♕ மிக துல்லியமான புத்திக்கூர்மையினையும், நினைவாற்றலையும் கொண்டு விளையாடக்கூடிய புத்தி ஜீவிகளின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்க விளையாட்டை தனக்கான துறையாக தேர்வு செய்து, சிந்தனைத் திறன், கடுமையான பயிற்சி, கட்டுப்பாடான வாழ்க்கை முறை என்பவற்றால் குறித்த விளையாட்டில் உலக அளவில் பெயர் பொறித்த, சாதனை தமிழன் விஸ்வநாதன் ஆனந்த்.


🌟 விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, தமிழ்நாடு மாநிலத்தில் 'மயிலாடுதுறை" என்ற இடத்தில் விஸ்வநாதன் அய்யர், சுசீலா என்ற தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தார்.


🌟 இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராக பணியாற்றி வந்தார். தாய் சுசீலா இல்லத்தரசியாக இருந்தாலும், பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட சமூக சேவகியாகவும், சதுரங்க விளையாட்டின் மீதான ஆர்வலராகவும் காணப்பட்டார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :


🌟 ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்துவந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே விஸ்வநாதன் ஆனந்திற்கு சதுரங்கம் விளையாட கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, 'டால்" என்ற செஸ் கிளப்பில் சேர்த்தார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்தின் செஸ் விளையாட்டு அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றது. விஸ்வநாதன் ஆனந்த் தனது பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் முடித்தார். பின்னர், உயர்கல்வி பயில 'லயோலா கல்லூரியில்" சேர்ந்த அவர் இளங்கலை படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.


🌟 சிறு வயதிலிருந்தே விஸ்வநாதன் ஆனந்த் அபாரமான நினைவாற்றல் கொண்டவராக காணப்பட்டதாகவும், தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த முயற்சி ஆனந்திடம் காணப்பட்டதாகவும் அவரது பயிற்சியாளர் கூறுவார். இதனால், தனது எதிர்கால இலக்கு எதுவென தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் கல்வியிலும் தனது கவனத்தை செலுத்தினார்.


🌟 வெறுமனே செஸ் பயிற்சிகள் மட்டுமல்லாது, உடற்பயிற்சியும் முக்கியம் என்பது விஸ்வநாதன் ஆனந்தின் ஆழமான நம்பிக்கையாக இருந்தது. அதனால் உடலளவிலான பயிற்சிகளையும் தினமும் மேற்கொண்டு வந்தார் விஸ்வநாதன் ஆனந்த்.


சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்தின் பயணம் :


🌟 தொடர்ச்சியாக தனக்கான பயிற்சிகளை பெற்றுவந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு வெற்றிகள் மிக விரைவாகவே வந்து சேர்ந்தது.


🌟 விஸ்வநாதன் ஆனந்திற்கு பதினான்கு வயதாக இருக்கும்போது, அதாவது 1983ல் தேசிய அளவில் நடத்தப்படும் சதுரங்க போட்டிகளில் ஒன்றான Sub-Junior Chess Championship-ல் 9/9 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றதிலிருந்து சதுரங்க கட்டங்களில் தனது வெற்றிப்பாதத்தினை பதிக்க ஆரம்பித்தார்.


🌟 தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதினை பெற்ற அவர், 1985ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் 'சாம்பியன் பட்டம்" வென்றார்.


வெற்றிப்பயணம் :


🏆 கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், /பைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கான தகுதி சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார்.


🏆 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்க போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.


🏆 பின்னர், 1988ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் 'கிராண்ட் மாஸ்டர்" ஆனார். இந்தியாவில் அதற்கு முன் யாரும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதில்லை.


🏆 உலக சதுரங்க போட்டிக்கு முதன்முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் 'அலெக்ஸீ கிரீவை" வென்றாலும், காலிறுதி சுற்றில் அதே நாட்டை சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார்.


🏆 அதனை தொடர்ந்து, 1995ல் அரையிறுதியிலும், 1996ஆம் ஆண்டு பிசிஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் இறுதிச்சுற்றிலும், 1997ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற /பிடே உலக சதுரங்க போட்டியின் இறுதிச்சுற்றிலும் தோல்விகண்ட விஸ்வநாதன் அவர்கள், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் 'அலெக்ஸீ ஷீரோவை" வீழ்த்தி 'உலக சாம்பியன் பட்டம்" வென்று சாதனை படைத்தார்.


🏆 சதுரங்க விளையாட்டில், இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 2003ல் எப்ஐடிஇ 'உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்" பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் லூயிஸ் நகரில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.


🏆 தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்த அவர் 2006ல் செஸ் விளையாட்டுக்கான எலோ ரேட்டிங்கில் 2800 புள்ளிகளை கடந்தார். வெகுசிலரே அதை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


🏆 பின்னர், 2007ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் 'இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்" வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவு செய்து இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தார்.


🏆 அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி 'மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்" வென்று சாதனை படைத்தார்.


🏆 2010-ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, 'நான்காவது முறையாக சாம்பியன் பட்டம்" வென்று மீண்டும் சாதனை படைத்தார்.


🏆 2012ஆம் ஆண்டு உருசிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 'ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை" வென்று உலக சாதனைப் படைத்தார்.


🏆 செஸ் தரவரிசையில் தொடர்ந்து 21 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தார் விஸ்வநாதன் ஆனந்த். ரேபிட் வகை செஸ் போட்டிகளில் தான் துவக்கம் முதலே அவருக்கு ஆர்வம் அதிகம். ரேபிட் வகை செஸ் தொடர்களில் பல்வேறு பட்டங்ககோல் ரளை வென்று குவித்துள்ளார்.


🏆 செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களை டோர்னமென்ட் முறையிலும், நாக்-அவுட் முறையிலும், ரேபிட் முறையிலும் வென்ற ஒரே வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.


இல்லற வாழ்க்கை :


👪 விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996ஆம் ஆண்டு அருணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.


விருதுகளும், மரியாதைகளும் :


1985 - அர்ஜுனா விருது.


1987 - இந்திய அரசால் 'பத்ம ஸ்ரீP" விருது.


1987ஆம் ஆண்டிற்கான 'தேசிய குடிமகன்" மற்றும் 'சோவியத் லேண்ட் நேரு" விருது.


1991 மற்றும் 1992ஆம் ஆண்டுக்கான, 'ராஜீவ்காந்தி கேல் ரத்னா" விருது.


1998 - பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், 'புக் ஆ/ப் தி இயர்" விருது.


2000 - மத்திய அரசால் 'பத்ம பூஷன்" விருது.


1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்கான, 'சதுரங்க ஆஸ்கார்" விருது.


2007 - இந்திய அரசால் 'பத்ம விபூஷன்" விருது.


தனது நகர்வுகள் அத்தனையும் மிக லாவகமாக வெற்றிக்கட்டங்களை நோக்கி நகர்த்துவதற்கு மிக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு, அதில் சாதித்து காட்டிய தமிழன் விஸ்வநாதன் ஆனந்தின் வெற்றிகள் இத்துடன் முடிவடையவில்லை. 


தன்னுடைய பதினான்கு வயதிலேயே சதுரங்க விளையாட்டில் வெற்றிப்பயணத்தை தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே 'ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்" பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்குகிறார் விஸ்வநாதன் ஆனந்த்.


சதுரங்க விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.


இன்னும் தன்னுடைய அபாரத்திறமையால் பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு, வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். தனது வெற்றிகளை நோக்கி இன்னமும் கூட ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த், சுவைப்பதற்கான வெற்றிக்கனிகள் இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா..!! 64 கட்டங்களின் எவர்கிரீன் ராஜா..!! Reviewed by ambrish on October 29, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app